சனி, 28 ஏப்ரல், 2018

வீதி கலை இலக்கிய களமும் - ஆக்ஸ்போர்டு கேட்டரிங் கல்லூரியும் - கவிமதி சோலச்சி

"உரக்கச் சொல்வோம் உண்மையை"

இலக்கிய நிகழ்வு ஒன்று தொடர்ந்து மாதந்தோறும் மூன்றாவது அல்லது நான்காவது ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் இடத்தில் இலவசமாக இயங்கிவருகிறது என்றால் அது புதுக்கோட்டையின் "வீதி கலை இலக்கிய கள""மாகத்தான் இருக்கும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை.

   மாதந்தோறும் பல்வேறு எழுத்தாளர்களை வரவேற்று உலகறிந்த படைப்பாளர்களையும் உருவாகும் படைப்பாளர்களையும் உலகுக்கு அறிமுகம் செய்து வருகிறது. மின்சார வாடகை இல்லை,  அறை வாடகை இல்லை,  கழிப்பறை வசதியுடன் கூடிய விசாலமான அறையை மாதந்தோறும் இலக்கிய நிகழ்வுக்காக இலவசமாக தந்துகொண்டிருப்பவர்தான் ப்ரியத்திற்குரிய அண்ணன் புதுக்கோட்டை  ஆக்ஸ்போர்டு கேட்டரிங் காலேஜின் நிறுவுநர் உரிமையாளர் ஆக்ஸ்போர்டு சுரேஷ் அவர்கள்.

   பலநேரங்களில் இலக்கிய நிகழ்வு நடைபெறுகிறபொழுது தனது கல்லூரி மூலம் தேநீரும் இனிப்புகளும் வழங்கி படைப்பாளர்களை கௌரவப்படுத்தி வருபவர். அது மட்டுமல்லாது தூத்துக்குடி மாவட்டத்தில் பிறந்து புதுக்கோட்டையில் அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றிய கவிஞர் வைகறை அகால மரணமடைந்தபோது தானாக முன்வந்து அந்தக் குடும்பத்திற்கு பெரும் தொகையை தந்து உதவியவர். இன்று வீதி கலை இலக்கிய களமானது 29.04.2018 ஞாயிற்றுக்கிழமை தனது ஐம்பதாவது நிகழ்வை கொண்டாடி மகிழ்ந்து வருகின்றதென்றால் தனது கல்லூரியை மாதந்தோறும் ஒரு ஞாயிற்றுக்கிழமை இலக்கிய நிகழ்வுக்காக வழங்கிவரும் அருமை அண்ணன் ஆக்ஸ்போர்டு சுரேஷ் அவர்களையே சேரும்.

  எந்தவித விளம்பரமும் ஆடம்பரமும் இல்லாமல் புதுக்கோட்டை புதிய பேருந்துநிலையம் மாடியில் மிகச் சிறந்த கேட்டரிங் காலேஜ் -ஐ நடத்தி வரும் சமையற்கலை வல்லுநர் சமூக சிந்தனையாளர் இலக்கிய ஆர்வலர் அருமை அண்ணன் ஆக்ஸ்போர்டு சுரேஷ் அவர்களுக்கு புதுக்கோட்டை வீதி கலை இலக்கிய களம் நெஞ்சம் நிறைந்த நன்றியைத் தெரிவித்து மகிழ்கின்றது...

   தோழர்களே...!
உண்மையைச் சொல்வதும் உளமார வாழ்த்துவதும் உலக நடைமுறை.

    அண்ணன் ஆக்ஸ்போர்டு சுரேஷ் அவர்களின் பணி சிறக்க மனசார வாழ்த்தி மகிழ்கிறேன் ...
  நீங்களும் வாழ்த்தி மகிழ்வீர்கள் என்று நம்புகின்றேன்

  நெஞ்சம் நிறைந்த நன்றியுடன்
கவிமதி சோலச்சி புதுக்கோட்டை

ஞாயிறு, 22 ஏப்ரல், 2018

சுனை சிந்திய கண்ணீர்.... - சோலச்சி

         சுனை சிந்திய கண்ணீர் ..... [வள்ளல் பாரி]
                                 -சோலச்சி
மலைகள் யாவும்
புகழப்படுவதில்லை...
ஆனால்
பறம்பு மலை மட்டும்
இகழப்படுவதேயில்லை....!

பாரியை மைந்தனாய்
பெத்தெடுத்தது...
முந்நூறு ஊர்களை
காத்து வந்தது ....!

செல்வம் சேர்ப்பது
எளிது
சீரிய வழியில் செலவு
அரிது....!

வற்றாத சுனைகளும்
வளம் தரும்  பலாக்களும்
திகட்டாத தேன்களும்
செறிந்து இருக்கும் ...
பாரியின் குணம் போல்
உயர்ந்து இருக்கும்...!

பேரரசு மத்தியிலே
சிற்றரசுகள் ....
சிற்றரசுகளில்
பறம்புநாடு
சிறப்பாய்....
பார் வியக்கும்
வனப்பாய்.....!

குறிஞ்சியும்
முல்லை அரும்புகளும் சூழ்ந்த
பறம்பு நாடு....
சோலைகள் நிறைந்த
சின்ன நாடு....!

பறம்பு மலை உள்ளதால்
பறம்பு நாடானது....
பறம்புக்கு புகழ்
பாரியால் வந்தது ...!

முந்நாளில் பறம்பு மலை
இந்நாளில் பிரான் மலை ....

முந்நூறு ஊர்களை
ஆண்ட மன்னவன்...
முகம் சுளிக்காது
வாரி வழங்கும்
தென்னவன்.....!

பறம்பு மலை
சுனை நீர் சுவை கூட்டும்...
மலர்களை வண்டுகள் முட்டும்
பலா மெரு கூட்டும்....!

கவி புனையும் கபிலரை
தோழனாகக் கொண்டவர்
பறம்புக்கு
பாரியே ஆண்டவர்...!

சிற்றரசரின் புகழ்
சிலருக்கு பிடிக்கவில்லை
யாரிடமும்
இவர் நடிக்கவில்லை
வேந்தர்கள் பலருக்கு
இதயம் கூட துடிக்கவில்லை....!

யாழிசைகள்
மீட்டுக்கொண்டே....
குயிலிசைகள்
இசைத்துக் கொண்டே....

பாரியின் கைகள் சுருங்கி
இருக்காது ...
பாரில் யாரையும் வெறுக்காது....!

சந்தனமோ மார்பில்
குளிர்ச்சியில்...
மன்னவன் முகமோ
மலர்ச்சியில்....

கடல் மடை
திறந்தார் போல் பேச்சு
காவல் காப்பதே
அவரின் மூச்சு.....

மண வயதில் மகள்கள்
இரண்டு
அங்கவை சங்கவை
பெயர் கொண்டு ....!

பாரி போல் பெருங்குணம்
கொண்டவர்கள்...
பாமரர் இதயத்தை
கண்டவர்கள் ....!

காட்டு வழி பயணத்தில்
கண்கவர் சோலைகள்
கண்களைப் பறித்தது...
ஒற்றைத்தூர் முல்லைக்கொடி
அரசன் வழி மறித்தது....
துன்பம் காணா பாரி
துவண்டு போனார்...
ஏறிவந்த தேரில்
முல்லையை ஏற்றலானார்...!

நடந்தே இல்லம்
சென்றார்
நாளொருநாளில்
புதிய தேரொன்றும்
செய்துகொண்டார்....

விரைந்து தேர் செய்யும்
வலிமையானவர்
வாழ்வில் என்றும்
எளிமையானவர்....!

உயர்திணைகளுக்கு மட்டும்
உரியவர் அல்ல....
அஃறிணைகளுக்கும்
அருமை தோழர்....!

வளம் கொண்ட பாரியை
வதைப்பது எப்படி...
முடியரசுகள் மூன்றும்
திட்டம் தீட்டின...
மங்கைகளை மணக்க
மடல்கள் அனுப்பின....!
மடல்களும் கிடைத்தது
மன்னவன் மீசை துடித்தது...

சூழ்ச்சி கண்டு நொந்தார்
சூட்சுமமாக பதில் தந்தார்...!

சேர சோழ பாண்டியர்
ஒன்றாக கூடினர்
பாரி வள்ளலை
வசையும் பாடினர்...

போர் முரசுகள் முழங்கின
படைகள் பறம்பைச் சூழ
பறவைகளும் கலங்கின....!

கவின்மிகு கபிலர்
கடும் வாதம் செய்தார்
மலைமேல் பாரி
மனதை நெய்தார்....!

ஊர்களனைத்தும்
தானமானது.....
இம்மலையும் பலருக்கு
தானமானது...
எஞ்சியிருப்பது நானும் அவரும்
போரோ தேவையில்லை ...
போரெனில் உங்களில்
பலவுயிர்கள் மாயும்
எங்கள் வாள்களே தேயும் ....!

அஞ்சி ஒடுங்குவது
பாரியின் குணமல்ல...
அச்சமில்லையேல்
களம் காணுங்கள்
போர் எங்களுக்கு புதிதல்ல.....!

கபிலரின் உதடுகள்  பேசின
கடுஞ்சொற்களை வீசின....
அச்சத்தில்
படைகள் திரும்பின...
பாரியை கொல்வதையே
விரும்பின....!

கபிலரில்லா நேரத்தில்
பாணராக சிலர்
பண்கள் பாடினர்...
தர ஒன்றுமில்லாததால்
தன்னையே வழங்கினார்....
பாணர்கள்
அமைதியாய் சற்றே நின்றனர்
படைகள் காண கொன்றனர்....!

பாணராக வந்தவர்கள்
முடிவேந்தர்களின்
பணியாட்கள்
நல்லோராய் நடித்தனர்....
பாரியின் நிலையால்
பலரும் துடித்தனர்....

பறம்பு நாடு வீதியெங்கும்
கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது
பாமரக் கூட்டம்
முகமோ வாடியது....!

பாரியின் இறப்பால்
படபடத்தார் கபிலர்...
செந்தீமூட்டி சாக துடித்தார்....
பாரியின் செல்வங்களோ
தடுத்தன...
கண்ணீரால் துடித்தன....!

கபிலரின் ஆதரவில்
கன்னியர்கள் இருந்தனர்...
கடும் சோகத்தையே
அருந்தினர்....

சோகத்தை தன்னுள்
போட்டுக்கொண்டார்...
போராட்டத்தோடு
மங்கைகளை
காத்து வந்தார்....

நாட்கள் கடந்தன
நலமாய்
கனிந்தன....
மங்கைகளை
மலையமான் அரசனின்
மகன்களுக்கு
மணம் முடித்தார்...
ஆனந்த கண்ணீர்
வடித்தார்....!

நட்பின் சிகரமாய்
விளங்கியவர்
அறம் ஒன்றையே
முழங்கியவர்....

கடமை முடிந்ததென்று
சிரித்தார்...
தென்பெண்ணையாற்றில் தீமூட்டி
உயிர் மரித்தார்....!

அலறிக்கொண்டே ஓடிய ஆறு
அன்று முதல்
அழுதுகொண்டே .....

பாவம்.....
பறம்புமலை
பாரியையும் இழந்தது...
பாணரையும் இழந்தது....
அலைமோதிய சுனை
இன்றும்
அழுதுகொண்டே  வழிகிறது.....

       -சோலச்சி புதுக்கோட்டை

சனி, 14 ஏப்ரல், 2018

யாரால்..... -சோலச்சி

                   யாரால்......?????

                           -சோலச்சி புதுக்கோட்டை 

மாலை நேரம்
சிறு குருவிகளின் குரலோசை
சின்ன மூங்கிலின் குழலோசை
அழுகின்ற சத்தம்
அது
ஆற்றுநீரின் யுத்தம்...!

வயதோ அறுபது
பெயரோ அழகரு....
பரந்த பெரிய ஆலமரம்
நிழலின் மடியில்
நித்திரைக்கு போனார்
கடந்த வாழ்வினை
நனவாய் கண்டார் ...!

பால்வாடி போகாமல்
பள்ளிக்கூடம் போனது முதல்
பருவம் கொஞ்சம் தொடங்கியது
பகல் நனவு மெல்ல துவங்கியது....!

எட்டு படித்து ஒன்பது என
பள்ளி வாழ்க்கை ஆரம்பிக்க...
பருவ மங்கையவள் கண் அசைக்க
காதல் சொல்ல இவன் துடிக்க
வகுப்பு பத்தும் இவன் முடிக்க...!







எப்படி காதலை எடுத்தியம்ப
என்றே மனம் புலம்ப...
சொல்லாதிருந்தால் தப்பையா
சொல்லு என்றான் நண்பன்
கருப்பையா....!
விடை நான் தருவேன்
விடைகொடு எனக்கு
என்றே உரை தொடுத்தாள்
தோழி தமிழ்ச்செல்வி ...

கிறுக்கன் அழகருக்கு
கிறுக்கி எவளும் கெடைப்பாள்
நறுக்கிட்டேன் நம் நட்ப
முறுக்கினாள் காதலி
லீலாவதி ...!

அவளின் உரை கேட்டு
அழுதான்
அழகு விரலால்
அதை துடைத்தான்....
தோழன் அழகரு
துவண்டு விடக் கூடாதென்று
சிரித்தே முகம் சிவந்தாள்
சித்திரப்பாவை தமிழ்ச்செல்வி....

அழகான நண்பன்
ஆறுதல் சொன்னான்
வடிவேலன்...
இருவரும் பேருந்தில்
ஏக்கத்துடன் பயணிக்க....
நண்பன் ராகவன்
இவன் கவிதை படிக்க...

இளைய முகம் ஒன்று
அழகர் முகம் பார்க்க
கொடுங்க அதை என்றே
அவள் கரம் நீட்ட....
கொடுத்தான் அழகரு
விழித்தான் திருதிரு....!!!

இளைய முகம் அவள்
இவன் முன்னே வந்து
இந்தாங்க கடிதம்
இன்னும் எழுத
எப்பவும் துணையாவேன்
என்றே அவள் சிரித்தாள்
காதல் நெஞ்சை
வளர்த்தாள்....!

பிரித்தவன் மயங்கினான்
படிக்கவே தயங்கினான்
மலரை வண்டு கொஞ்சும்
மணம் அதை கொஞ்சும் - என்
மனம் உன்னில் தஞ்சம் ...!!?
என்ற கவிதை மயங்க வைத்தது
அதனால் அவனை
தயங்க வைத்தது....!!!

ஏன் நண்பா கலக்கம்
இது வாலிப குழப்பம் ...
நீனாக கேட்கவில்லை
அவளாக கேட்கிறாள்
இது உடையாதது
நீயும் காதலி என்றான்
மலர் தூவி நின்றான்
தோழன் வடிவேலன்...!!!

அறியாத அவள் வந்து
அத்தனையும் இதிலிருக்கு
மொத்தமாய் எடுத்துக்கங்க
முத்தம் நூறு கொடுங்க
பத்திரமா மனசுக்குள்ள
பக்குவமா வச்சுக்கிறேன்
கண்களால் பேசி
கடிதாசி தந்தாள்....!!!!

உன்னையே நம்பி
உயிர் வாழும் கீதா...
நீ என்னை நீக்கினால்
என் உயிர் நீங்கிடும்
உன் பதிலை சொல்லிடு
என்னை அணைத்திடு
உருக்கமான பதிலை
சுருக்கமாக தந்திருந்தாள்
அழகரு பதிலுக்கு
காத்திருந்தாள்....!!!!

இருவரும் ஒருவராய்
உடல்கள் பிரிந்து
உள்ளம் இணைந்து
வாழ்ந்தனர்
காதலிலே மிதந்தனர்.....










ஆள்மாறிய காதலை
அழகரு சொல்லலையே
என்றே தமிழ்ச்செல்வி
அரட்டை அடிப்பாள்
ஆனந்தக் கடலில்
துள்ளிக் குதிப்பாள்....

முதல் காதலை சொல்லிடு
முறையிட்டான் தோழன்
கருப்பையா....
சொன்னதுதான் தாமதம்
வெடித்ததோ விபரீதம்
அவளோ வெறுத்தாள்
அழகரோ விரும்பினான்
வேதனையில்  துடித்தான்
பள்ளியில்
வேகத்தோடு படித்தான்....!!!!

நீயாக கேட்கவில்லை
அவளாக கூடினாள்
விரும்பியவள் வெறுக்கிறாள்
வேண்டாம் வேதனை
செய்திடு சாதனை...
வடிவேலன் கருப்பையா
தோழி தமிழ்ச்செல்வி
உரையும் தொடுத்தனர்
உண்மை நட்பை
உணர்த்தினர்....

வழக்கிறிஞராய்
வளமுடனே வாழ்ந்து வந்தார்
அழகான மனைவியோடு
அமைதியாக வாழ்ந்து வந்தார்.......

நீ உயர
காதலா....??? நட்பா....???

மனம் கேட்டது கேள்வி...

சொல்ல நினைத்து கண்திறந்தார்
பேரக் குழந்தைகள் கண்டு
பதிலையே மறந்தார்....

பதிலை மறந்த அழகருக்கு
பதில் தருவது - உங்கள்
மனக் கணக்கு.....!!!!

    -  சோலச்சி
       புதுக்கோட்டை
       பேச : 9788210863

புதன், 11 ஏப்ரல், 2018

பேசு தலைவா...... -சோலச்சி


               முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள்


பேசு தலைவா பேசு 
உந்தன் கனத்த குரல் தொடுத்து பேசு 
எழுத்துக்கள் ஒவ்வொன்றும் பொன் உதட்டில்
 தூரி ஆடிய கதை பேசு.... 


எழுதுகோல் புனைந்த வசனங்கள் 
எல்லோர்க்கும் வாய்க்குமா பேசுங்கள் 
எடுத்து வைத்த காலடிகள் 
படைத்த சரித்திரம் பற்றி பேசுங்கள்... 

திமிறி எழுந்த உந்தன் நெஞ்சு 
காணாமல் தெருவில் நுழைந்தது பல நஞ்சு 
நையப்புடைத்து நானிலம் காக்க
நற்றமிழ் சொல்லெடுத்து பேசுங்கள்.... 

குளித்தலையில் நீராடி திருவாரூரில் தேரோட்டி 
திசையெங்கும் உன் வசம் செய்தாய் 
தீந்தமிழுக்கே தேன்சுவை நெய்தாய்... 

எல்லாம் யோசித்து எழுதிக் குவித்தாய்
எதை யோசித்து மௌனம் காத்தாய்... 

நிற்காது சுழலும் நீயொரு பூமியல்லவா 
நில்லாமல் பேசு தலைவா பேசு 
சொல்லாமல் அழுகிறது சொற்களெல்லாம்.... 
உந்தன் சொந்தங்களெல்லாம்.... 

                        -சோலச்சி புதுக்கோட்டை