சனி, 20 ஜனவரி, 2018

"புத்தனைத்தேடும் போதி மரங்கள் " - சோலச்சி

கவிஞர் கு.அ.தமிழ்மொழி அவர்களின் "புத்தனைத் தேடும் போதி மரங்கள் " என்ற கவிதை  நூல் ஒரு பார்வை...
       - சோலச்சி புதுக்கோட்டை
வெளியீடு :
தமிழ்மொழி பதிப்பகம்
01, முருகன் கோயில் தெரு,
சண்முகாபுரம், புதுச்சேரி  - 605009
பேச : 7418477364
மொத்த பக்கங்கள் : 96
விலை  :ரூபாய் 100
பதிப்பாண்டு : 10.10.2017
தமிழ்கூறும் நல்லுலகில் எண்ணற்ற நூல்கள் மலை போல் குவிந்த வண்ணம் இருக்கின்றன. இதில் கவிதை நூல்கள் அதிக இடத்தைப் பிடிக்கின்றன என்பதில் ஒருபோதும் ஐயமில்லை.  காரணம் கணக்கில்லாமல் கவிஞர்கள் பெருகிக்கொண்டே இருக்கின்றனர். இதை தமிழுக்கு கிடைத்த பெருமையாகவே நான் கருதுகின்றேன்.

  புரட்சிகளின் பிறப்பிடமாய் போர்க்களமாய் திகழ்ந்த மண் புதுச்சேரி.  இந்தப் புதுச்சேரியில் புதிய புரட்சிக்கு களம் அமைத்து கவிதைக் களத்தில் களமாடிக்கொண்டு இருக்கிறார் கவிஞர் கு.அ.தமிழ்மொழி. பெயரிலேயே தனது மொழியை வைத்திருக்கும் இவர் தாய்மொழியாம் தமிழை மிக அழகாக கையாண்டு இருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.  தமிழ் இவருடன் அழகாய் விளையாடுகிறது என்று சொன்னாலும் மிகையில்லை உண்மைதான்.
  "புத்தனைத் தேடும் போதி மரங்கள் " என்ற தலைப்பு எல்லோரையும் ஈர்க்கக் கூடியதாகவே இருக்கிறது.  பல நேரங்களில் தலைப்புக்கும் கருத்துக்கும் பொருத்தம் இல்லாமல் போய்விடும்.  ஆனால் இந்த நூலில் உள்ள துளிப்பாக்கள் அனைத்தும் தலைப்புக்கு ஏற்றபடி மிக நேர்த்தியான முதிர்ச்சியானவையாக இருப்பது பாராட்டுக்குரியது. மனசார பாராட்டி மகிழ்கின்றேன். பள்ளியில் படிக்கும் காலத்திலேயே இவர் தனது முதல் நூலை வெளியிட்டு தலைநகர் தில்லியில் தேசியக் குழந்தை விருதும் பெற்றிருக்கிறார் என்பது கூடுதல் சிறப்பு.
  நூலின் முதல் கவிதையிலே முத்திரை பதிக்கிறார் கவிஞர்.
  "வீடு திரும்பி இருக்குமா
    துணைக்கு வந்த பட்டாம்பூச்சி
   திடீர் மழை....!"
  ஆழ்ந்து நோக்கினால் இதில் பொதிந்திருக்கும் கருத்து புலப்படும். இவர் இளம் வயதுக் கவிஞர் என்பதால் பட்டாம் பூச்சி என்று தனது தோழியை குறிப்பிடுகிறார் என்றே நான் கருதுகிறேன்.   தன் தோழி தன்னை வீட்டில் விட்டுவிட்டு தூரத்தில் இருக்கும் அவர் வீட்டுக்குச் செல்ல வேண்டும்.  வழியில் மழை வந்தாக் ஒதுங்குவதற்கு கூட இடமில்லாத வழி. கொஞ்ச நேரத்தில் மழை வந்து விட்டது.  கையில் குடையும் இல்லை.  வருந்துகிறார் கவிஞர்.  தன் தோழி வீட்டுக்கு போனாளோ இல்லையோ தெரியவில்லையே... மழை வேறு வந்து விட்டதே என்று பதறுகிறார். இப்போது அந்தக் கவிதையை மீண்டும் ஒருமுறை வாசித்துப் பாருங்கள். உள்ளுக்குள் உங்களையும் அந்தக் கவிதை ஏதோ ஒரு விதத்தில் கட்டிப்போட்டுவிடும்..
  இன்று புகைப்படம் எடுப்பது என்பது சாதாரண நிகழ்வாகிவிட்டது. செல்பி (சுயமி) வந்துவிட்டது.  முன்னரெல்லாம் புகைப்படம் எடுப்பதென்றால் புகைப்பட கடையில் தவம் இருக்க வேண்டிய சூழ்நிலை இருந்தது.  அந்தச் சூழ்நிலையில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இன்றும் பொக்கிசமாய் பாதுகாக்கப்பட்டு வருகின்றோம். நான் ஆறாம் வகுப்பு படிக்கும்போதுதான் முதல் முதலில்  என்னை புகைப்படம் எடுக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதுவும் இலவச பேருந்து அடையாள அட்டைக்காக எடுத்த புகைப்படம்தான் நான் எடுத்த முதல் புகைப்படம்.  அதில் பள்ளியின் முத்திரை குத்தப்பட்டிருக்கும். முத்திரை குத்தப்பட்ட அந்த புகைப்படத்தை பாதுகாத்து வருகிறேன்.
  "பழைய புகைப்படம்
கரையானின் கரிசனம்
விட்டு வைத்தது என் முகத்தை.."
  என்று புகைப்படம் பற்றி குறிப்பிட்டு நம்முடைய பழைய நினைவுகளை தூண்டிவிட்டு நம்ம உருகச் செய்துவிடுகிறார் கவிஞர் கு.அ.தமிழ்மொழி அவர்கள்.
  "காசுக்கு ஓட்டு
நமக்கு நாமே
வைத்துக்கொள்ளும் வேட்டு " என்று எனது கவிதையொன்றில் நான் சொல்லியிருப்பேன். கவிஞரும் தனது நூல் மூலமாக பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறார். குற்றம் சாட்டுவதோடு விட்டுவிடாமல் வருந்துகிறார். ஆம் இதோ அந்த கவிதை ...
  "உரிமை தான்
இருந்தும் பயனில்லை
வாக்கு ...."
  என்று தனது ஆதங்கத்தை ஆணித்தரமாக பதிவு செய்கிறார்.  தனது கவிதையில் கேலியும் கிண்டலும் நடனமாடுவதை கவிஞர் உறுதி செய்திருக்கிறார். பெண்கள் தண்ணீர் பிடிக்கும் போது சில நேரங்களில் நீர் நிறைந்து வழிவது கூட தெரியாமல் தங்கள் பேச்சில் மூழ்கி இருப்பது இயல்பு. இந்தக் காட்சியை இவ்வாறு நகைச்சுவையோடு பதிவு செயகிறார்.
  "தண்ணீர் குழாய்
வழிந்த நீர் கேட்கிறது
ஊர்ப் பேச்சு..."
  ஈழப் படுகொலையை அருகில் இருக்கும் இந்தியா இரக்கமில்லாமல் வேடிக்கை பார்த்தது என்பது நாமறிந்த உண்மை. அந்தக் கொடூர காட்சியை புறா வழியாக உலகுக்கு புரியவைக்கிறார் கவிஞர்.
  "அமைதிப் புறா
குண்டடிபட்டு சிவப்பானது
ஈழப் படுகொலை ..."
  ஈழ மண்ணில் வெள்ளைக் கொடி ஏந்தி வந்த எத்தனையோ நம் உறவுகளை ஈவு இரக்கமின்றி சிங்கள அரசு கொன்று குவித்த நிகழ்வினை எவ்வாறு நாம் மறந்துவிட்டு போக முடியும் . இதை வாசிக்கும்போது என் கண்கள் குளமாகிப் போகிறது.
  தெர்மாக்கோலில் தண்ணீரை மூடுவது , கடலில் கொட்டிய எண்ணெய்யை வாளியில் அள்ளுவது போன்ற கோமாளித்தனமான வித்தைகள் காட்டி நம்மை மேலும் முட்டாளாக்க நினைக்கும் சதித்திட்டமெல்லாம் இந்தியாவைத் தவிர வேறெங்கும் நடைபெறாது.  சப்பானில் எதிரியாக இருந்தால் கூட ஓடவிட்டு வெல்வதுதான் இன்றுவரை நடைமுறையில் இருக்கிறது.  சப்பானியர்களின் ஒட்டுமொத்த நோக்கம் சப்பான் முன்னேற வேண்டும் என்பதுதான். ஆனால் இந்தியாவில் அப்படியா என்று நீங்கள்தான் முடிவு சொல்ல வேண்டும்.
  தனது கவிதையில் அழகாக எள்ளி நகையாடுகிறார் கவிஞர் கு.அ.தமிழ்மொழி அவர்கள்.
  "கடலில் எண்ணெய்
வாளியில் அள்ளுது
வல்லரசு இந்தியா..."
     இரவு நேர நடை பயணம் மேற்கொள்கிறார் ஒருவர்.  வழியில் தாகம் எடுக்கிறது.  யாரிடமாவது தண்ணீர் கேட்கலாம் என்றால் வழியில் எந்த வீடுகளும் இல்லை. தாகம் வேறு தணியவில்லை.  நாக்கு வறண்டுவிட்டது. சுற்றும்முற்றும் பார்க்கிறார் அவர். தூரத்தில் குடிநீர்க் குளமொன்று இருப்பது அந்த நிலவொளியில் அழகாய் தெரிகிறது.  வேகமாக செல்கிறார். அந்தக் குளத்தில் வான் நிலவு வசதியாக உறங்கிக்கொண்டு இருக்கிறது.  கைகளால் அள்ளிக் குடிக்கும்போது நிலவின் தூக்கம் களைந்து விடுமோ என்று அந்த வழிப்போக்கர் அச்சப்படுகிறார். இதைத்தான்
  ""நிலவை எழுப்பாமல்
நீர் குடிப்பதெப்படி?
கரையில் நான்....""
  என்று மிக நேர்த்தியான சொற்களால் நம்மை வசீகம் செய்துவிடுகிறார் கவிஞர் கு.அ.தமிழ்மொழி.
   நூல் தலைப்பு கவிதை நம் நெஞ்சை  சுடுகிறது.... நாம் இப்போது எதை நோக்கி போய்க்கொண்டு இருக்கின்றோம் என்ற கேள்வியை நம் நிறுத்துகிறது.
"புத்தனைத் தேடும்
போதி மரங்கள்
எண்திசையிலும் போர்க்குரல்.."
  இவருடைய துளிப்பாக்கள் அச்சு அசலாய் மின்னுகின்றன. நிச்சயம் இவர் இத்தரணியில் ஒளிவீசுவார் என்று நம்புகின்றேன்.
  அய்க்கூ உலகின் கதாநாயகன் அருமைக் கவிஞர்  தோழர் இரா.இரவி அவர்கள் , இலங்கை தோழர் மலையகம் மு.சிவலிங்கம் அவர்கள்,  அருமைத் தோழர் கவிஞர் கன்னிக்கோவில் இராஜா போன்றவர்கள் வாழ்த்துரை வழங்கி சிறப்பு செய்திருக்கிறார்கள்.
    கவிஞர் கு.அ.தமிழ்மொழி அவர்கள் மேன்மேலும் கவிதைகள் படைத்து இந்தச் சமூகத்தின் போராளியாக விளங்கி சீர்மிகு சமூகம் படைக்க தன்னால் இயன்றவரை களமாட வேண்டுமாய் வாழ்த்தி மகிழ்கின்றேன்....
      - அன்பு பண்பு
        பாசம் நட்பின் வழியில்
         எந்நாளும்
        கவிமதி சோலச்சி

5 கருத்துகள்:

  1. அருமையாக அலசி விமர்சித்த விதம் அழகு எனக்கும் படிக்கும் ஆவல் மேலிடுகிறது.

    கவிஞர். கு.அ.தமிழ்மொழி அவர்களுக்கு எமது வாழ்த்துகளும் - கில்லர்ஜி

    பதிலளிநீக்கு
  2. படிக்கத் தூண்டும் மதிப்புரை. நூலாசிரியருக்கு வாழ்த்துகள். பகிர்ந்த உக்ளுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  3. என்னை இந்த தளத்திற்கு வரவைத்த பெருமை சோலச்சியே சேரும்
    நேரிலே விமர்சனத்தே கேட்டேன்,அதை இங்கு கண்டேன்.
    இருவருக்கும் நன்றி
    கவிதைக்கும்,கவிஞருக்கும்
    சோலச்சிக்கும்,தமிழ்மொழிக்கும்

    பதிலளிநீக்கு
  4. வீடு திரும்பி இருக்குமா
    துணைக்கு வந்த பட்டாம்பூச்சி
    திடீர் மழை....!"
    நான் ரசித்து,ருசித்த வரி சோலச்சியின் மூலம் மற்றொன்று அமைதி மழலைப்பள்ள

    பதிலளிநீக்கு