ஞாயிறு, 8 அக்டோபர், 2017

முத்தன் பள்ளம் நாவல்

          "முத்தன் பள்ளம் "

    இரண்டாயிரம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் மாணவராக சேருகிறேன்.  கவிதை எழுதுவது,  பாடுவது பேசுவது என்ற எனது திறன்கள் வகுப்பறையில் நடந்தேறிக்கொண்டு இருக்கிறது.  எல்லோரும் என்னைப் பாராட்டிக் கொண்டு இருக்கிறார்கள்.   என்னை வியந்து பார்த்தபடி ஒரு குள்ளமான பையன் என்னருகே வருகிறான். நானோ  ஒட்டடைக்குச்சிக்கு சட்டை போட்டவிட்டால் எப்படி இருக்கிறேன். நானும் அவனை நெருங்குகிறேன். எங்கள் மலர ஆரம்பிக்கிறது. தொடர்ந்து இயங்கிக்கொண்டு இருக்கிறோம்.

    எப்படி எழுதுவது பேசுவது என்று என்னிடம் கேட்கும் அவனுக்கு ஆலோசனைகளை வழங்குகிறேன். அவனும் ஆர்வத்தோடு கேட்டுக் கொள்கிறான். இலக்கியம்தான் எங்களை சேர்த்து வைத்தது என்றால் மிகையில்லை.  நானும் அவனும் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் படிக்கும் காலத்தில்  இருவரும் சேர்ந்தே எண்ணற்ற நாடகங்களை அரங்கேற்றி இருக்கிறோம்.  நாடகங்களுக்கு கதை திரைக்கதை வசனம் இயக்கம் என அனைத்தும் நானே என்றாலும் கதாநாயகன் வேடம் மட்டும் அவன்தான்.  ஏனெனில் கதாநாயகனாக தன்னை எப்போதுமே காட்டிக்கொள்ள அவன் ஆசைப்படுவான். அவனுக்கு எதிர் கதாபாத்திரமாக நான். பல நேரங்களில் நாங்கள் இருவர் மட்டுமே நடிகர்களாக நடித்து பேர் பெற்றவையும் உண்டு. 

  எங்களை இரட்டையர்கள் என்றுதான் எல்லோரும் அழைப்பார்கள்.  அதில் சிலர் ப்ரியங்களுடன் இப்படியும் அழைப்பார்கள்.  "அரபி " இது சிலர் வைத்த செல்லப் பெயர்.  அது என்ன அரபி என்று எங்கள் முதல்வர் திரு.ஞானசுந்தரத்தரசு அவர்கள் பாரதி விழா நடைபெற்றுக் கொண்டு இருக்கும் போது மேடையில் கேட்டே விட்டார்.   "அருவை, ரம்பம், பிளேடு " என்று கீழிருந்த நண்பர் ஒருவர் சொல்ல அரங்கம் சிரிப்பலையில் மூழ்கியிருந்தது.

   நகைச்சுவையாக நிறைய நிகழ்வுகள் நடந்தேறினாலும் நாங்கள் கரகாட்டக்காரன் படத்தில் வரும் மாரியம்மா மாரியம்மா பாட்டுக்கு ஆடியதை எங்கள் சக நண்பர்கள் யாரும் எப்போதும் மறக்க மாட்டார்கள்.  மேடையில் ஆடி முடித்ததும் ,இப்போது நூறு மீட்டர் ஓட்டப்பந்தையம் நடைபெற்றது.  மற்ற போட்டிகள் அடுத்தடுத்து நிகழும் என்று எங்கள் உயர்கல்வி ஆசிரியர் திருமிகு.பிரபாவதி அவர்கள் சொல்ல அரங்கில் சிரிப்பொலி அடங்க அதிக நேரம் பிடித்தது. இருந்தபோதும் எங்களுக்குத்தான் இரண்டாம் பரிசு கிடைத்தது. இதில் வேடிக்கை என்னவென்றால் மொத்த நடனமே இரண்டு தான்.

  பயிற்சி காலத்தில் பயிற்சி பெற்ற பள்ளி மாணவர்களைக் கொண்டு "சித்திரங்கள் பேசுகின்றன" என்ற கைப்பிரதி நூலை நான் வெளியிட அவனும் அதேபோல கைப்பிரதி நூல் ஒன்றை வெளியிட எங்கள் முதல் நூல் அதுதான்.

   இன்று நான் மூன்று நூல்களையும் அவன் நான்கு நூல்கள் எழுதி ஐந்தாவதாக "முத்தன் பள்ளம் " என்கிற நாவலையும் எழுதி புதிய சகாப்தம் படைத்திருக்கின்றான்.  சு.இராஜமாணிக்கம் என்று எழுதிக் கொண்டு இருந்தவனை அண்டனூர் சுரா என்று பெயர் திருத்தம் செய்தேன். அவன் அப்படியே தற்போதும் தொடர்கிறான். என் அருமை மாப்பிள்ளையாகவும் இருக்கிறான்.
   
   முத்தன் பள்ளம் :

  நவீன உலகத்தில் நவீனத்தைக் கொண்டு படைத்த நாவல் "முத்தன் பள்ளம் ". சமகால அரசியலை கந்துவட்டிக்காரன் மூலம் பதாகைகளைப் பயன்படுத்தி முதல் பகுதி சிறப்பாக நகர்கிறது என்பதைவிட நம்மோடு பயணிக்கிறது. இரண்டாம் பகுதி புதுக்கோட்டை மன்னர்கள் மற்றும் ஊர்கள் பற்றிய பல தகவல்களை தரும் வரலாற்று நூலாக பயணிக்கிறது.  அரசர்களுக்கு உறுதுணையாக இருந்த வம்சம் ஒன்று இன்று அடிப்படை வசதிகூட இல்லாத அவலநிலையில் இருப்பதை சுட்டிக்காட்டுவதே இந்த முத்தன் பள்ளம். இதில் புனைவுகள் என்று முத்தன்பள்ளம் பற்றிய நிகழ்வுகள் ஒன்றிரண்டு இருந்தாலும் மற்றவை அனைத்தும் உண்மையே.

  உள்ளதை உள்ளபடி ஒளிவு மறைவு இல்லாமல் சொல்லப்பட்டிருக்கிறது. நாவலுக்கு அணிந்துரை வணக்கத்திற்குரிய எழுத்தாளர் நாஞ்சில்நாடன் என்பது கூடுதல் சிறப்பு. மேன்மை பதிப்பகம் நூலை மிகச் சிறப்பாக கொண்டு வந்திருக்கிறது.  பாராட்டுக்களை மனதார தெரிவித்துக் கொள்கிறேன்.

    முத்தன் பள்ளம் இரண்டு கதாநாயகன்களைக் கொண்டது. ஒருவர் கந்துவட்டிக்காரன் மற்றொருவர் பாட்டன். இரண்டும் சிறப்பான கதாபாத்திரங்கள். இதில் கவனிக்கப்பட வேண்டியது இரண்டு பகுதியுமே இரண்டு குறுநாவல்கள்.  இரண்டையும் சிறப்பாக செய்திருக்கும் என் அருமை மாப்பிள்ளை அண்டனூர் சுரா அவர்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள்.

   முத்தன் பள்ளத்தில் வரும் கதாநாயகர்கள் பாட்டன் - முத்தாயி இவர்களது காதலை மையப்படுத்தி நாவல் படைக்கப்பட்டிருந்தால் மிகச்சிறந்த நாவலாக வந்திருக்கும். வரலாற்று நிகழ்வுகளை இதில் புகுத்தியுள்ளார். வரலாற்று நிகழ்வு என்பது அரிதல்ல... இணையத்திற்குள் தேடினால் வேண்டும் வரை எடுத்துக்கொள்ள முடியும். இந்நாவலில் பலரும் அறியாத வரலாற்று நிகழ்வு என்று எதுவும் கிடையாது. இருந்தாலும் கையாண்ட விதம் மிகச் சிறப்பு.

  இதன் நோக்கம் சமகாலத்தில் எந்த அடிப்படை வசதியும் இல்லாத ஊருக்கு வசதியை செய்து கொடுப்பதுதான்.  அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் எண்ணற்ற முத்தன் பள்ளங்கள் இருக்கும் இத்தேசத்தில்தான் டிஜிட்டல் இந்தியா விளம்பரம் நாளும் பல்லைக்காட்டி இளித்துக்கொண்டு இருக்கிறது.........

   நாவல் முயற்சிக்கு பாராட்டுக்கள் மாப்ள. மேலும் நிறைய எழுத வாழ்த்துகிறேன்....

3 கருத்துகள்:

  1. தங்களின் விமர்சனம், நூலினை படிக்கும் ஆவலைத் தூண்டுகிறது நண்பரே.
    இன்றைய காலகட்டத்தில், உடனிருப்பவர்களைக் கண்டு பொறாமைப்படுபவர்கள்தான் அதிகம். ஆனால் தாங்களோ, தங்களின் நண்பரின் எழுத்தைப் பெருமை பொங்க பாராட்டுகிறீர்கள்.
    தங்களின் நல்ல மனதிற்கும், தங்கள் நண்பரின் நல்ல எழுத்திற்கும் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. பாராட்டுவதற்குப் பெருமனது வேண்டும். தங்களின் மதிப்புரை யதார்த்தமாக இருந்ததோடு நூலை வாசிக்கும் ஆர்வத்தை உண்டாக்கியது. நூலாசிரியருக்குப் பாராட்டுகள். பகிர்ந்த உங்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  3. நாவலுக்கான முன்னுரை அருமை.
    வாழ்த்துக்கள் சகோ.

    பதிலளிநீக்கு