புதன், 22 மார்ச், 2017

கவிஞர் தங்கம் மூர்த்தியின் தேவதைகளால் தேடப்படுபவன் - சோலச்சி

**தேவதைகளால் தேடப்படுபவன்**
               - கவிஞர் தங்கம் மூர்த்தி.
              

             கவிதை நூல்

       சோலச்சியின் பார்வையில்..........

   தேவதைகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட புதுக்கோட்டை  கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்களால் படைக்கப்பட்ட நூல்தான் "தேவதைகளால் தேடப்படுபவன் ". நிகழ்கால சமூகத்தை அப்படியே படம் பிடித்துக் காட்டுகிறது. அவரவர் வாழ்க்கையை வாசிக்கும் போதே உணர வைக்கிறார் கவிஞர்.

தேவதைகளால் தேடப்படுபவன்


" இப்போது
மங்கலாய்த் தெரிகிறதெனக்கு
அம்மா இல்லா
இவ்வுலகு.....!!!
        என்று தனது தாய்க்கு நூலை சமர்ப்பணம் செய்து தொடங்குகிறார்.
    தமது கருத்துகள் எந்த வடிவத்தில் இருந்தாலும் அவை வாசிப்போருக்கு புரியும் நடையில் இருக்கும்போதுதான் அவை வெற்றி பெறுகின்றன.  கவிஞர் அவர்கள், வெற்றி பெற்ற கவிதைகளையே படைத்துள்ளார்.
"இருள்
நழுவி விலகி
நிலவுக்குப்
பாதையமைக்கிறது.......
..........,,,
...........,,,
"அப்போது
பூமியெங்கும்
பூத்திருந்தன
நிலவுகள்...!!"
  என்று நிலவு பூக்கும் பூமி என்கிற தலைப்பில் தமது நிலவினை பூமியெங்கும் பூத்துக்குலுங்கச் செய்கிறார்.
   சொற்களைப் பற்றிச் சொல்லும்போது தமது சொல்லாடலை அழகாக நடனமாடச் செய்திருக்கிறார்...
"சூடேற்றும் தருணத்திற்காகத்
தவமிருக்கின்றன
எல்லாச் சொற்களும்....!"
    எவ்வளவு ஆழமான ஆய்வு என்பதை நம்மால் உணர முடிகிறது. மிகப்பெரிய இயந்திரங்களைக்கூட கையாளுவது எளிது. ஆனால் சொற்களை எல்லோராலும் கையாள முடியாது. சொற்களின் வித்தையை கற்றறிந்தவர்களால் மட்டுமே இது சாத்தியமாகும்.



   ஒவ்வொரு மனிதனும் தன்னிலை உணர்வதில்லை.  பிரச்சினைகளுக்கு முக்கிய காரணமே தன்னை உணராததுதான். இதுதான் வாழ்க்கை என்று உணர்ந்து விட்டால் எல்லாம் இன்பமயமாகிவிடும். எல்லோருக்குமான வாழ்க்கை மரணத்தின் அருகில்தான் உணர வைக்கிறது. கவிஞர் அவர்கள் மெய் உணர்தல்  என்கிற கவிதையில்
"நன்றாய்
வாழ்ந்ததைப் போலிருக்கிறது
என்றோ
செத்ததைப் போலவும் இருக்கிறது..."
  இதுதான் வாழ்க்கை. வாழ்க்கையை நமக்கு உணர வைக்கிறார்.
  கவிஞர் அவர்கள் தனது பலமாக கருதுவது எது தெரியுமா .....
"ஒருவேளை
சாத்தான்களை
சந்திக்க நேர்ந்தால்
உன்
புன்னகையைக் கொண்டே
விரட்டுகிறேன் ...!
   என்கிறார்.  ஆனால் நாம் சிரிக்க மறந்து சீரழிந்து கொண்டு இருக்கிறோம். புன்னகைதான் வாழ்க்கையின் வழித்துணை. இருப்பதில் இருந்து புன்னகையை கண்டறிய வேண்டும். எந்தக் கடைதனிலும் விலைக்கு கிடைக்காது புன்னகை.  அந்த புன்னகையால் நட்பு வட்டத்தை பெருக்கவும் முடியும். சாத்தான்களை விரட்டி அடிக்கவும் முடியும்.
  
  திருவிழாக்கள் எதற்கு கொண்டாடுகிறோம் என்று தெரியாமலேயே திருவிழாக்களை கொண்டாடி வருகின்றோம். ஊர்த்திருவிழாக்களின் கடைசி நிகழ்வாக மஞ்சள் நீராடுதல் என்ற நிகழ்வு நடக்கும். திருவிழா காலங்களில் கூட்டம் அதிகமாக இருக்கும். பலதரப்பட்டவர்களும் கூடியிருப்பார்கள். எந்தவிதமான நோய் தாக்குதல்களும் வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் கிருமிநாசினியான மஞ்சளை நீரில் கலந்து நீராடினார்கள் நம் முன்னோர். ஆனால் இன்று வண்ணப் பொடிகளை தூவி விளையாடிக்கொண்டு இருக்கிறோம்.
திருவிழாக்களைப் பற்றி கவிஞர் இவ்வாறு கூறுகிறார் ....
  "குழந்தைகளைக் கண்டதும்
குதூகலத்துடன்
துள்ளுகின்றன
திருவிழாக்கள்...."
    
என்கின்றார். திருவிழாக்கள் மூலம் ஏதோவொரு வகையில் நம் மகிழ்ச்சியாக இருந்தாலும்,  குழந்தைகளால்தான் திருவிழாக்களே மகிழ்ச்சியாக இருக்கின்றன என்கின்றார். கவிஞர் அவர்கள் இந்த இடத்தில் குழந்தைக் கவிஞராகவே மாறியிருக்கிறார்.
   எல்லோராலும் கொண்டாடப்படக்கூடிய கவிதை இது. எல்லோரது வாழ்க்கையிலும் கூடவே வரக்கூடிய கவிதை. நாய்கள் பற்றிய கவிதை.
"நாய்களைப் பற்றிய
கவிதைகள் பெரும்பாலும்
நாய்களைப் பற்றியதாய்
இருப்பதில்லை ....
......,,,
......,,,
எங்கள் தெருவில்
வேலைவெட்டியின்றித்
திரிகின்றன
பல நாய்கள்...
....,,,
.....,
என் எலும்புத் துண்டுகளை
கடித்து
என்னையே கடிக்க
முனைகின்றன.....
.....,,,,
.....,,,
நாய்களோடு வாழவும்
பழகிக்கொள்ள வேண்டியிருக்கிறது ....
நாய்களைப் பற்றிய
கவிதைகள் பெரும்பாலும்
நாய்களைப் பற்றியதாய்
இருப்பதில்லை ....!
  இப்போது புரிந்திருக்குமே..... எல்லோருக்கும் ஏற்ற கவிதையிது. இனி நாய்களின் எண்ணிக்கை வெகுவாக குறைய தொடங்கலாம். நான் நாய்கள் என்று சொன்னது நாய்களை இல்லை.
   "எம்முறையிலும்
வேறெவ்வகையிலும்
எதுவொன்றும்
செய்ய முடியாது என்னை...
காரணம் நான்
தேவதைகளால் தேடப்படுபவன்.."
  என்று கவிதையொன்றில் குறிப்பிடுகிறார். தன்னம்பிக்கை இழந்து பலவீனமாய் இருப்போர் இதை வாசிக்க நேர்ந்தால் அவர்களுக்குள் தன்னம்பிக்கை ஊற்றெடுக்கும். தன்மீது நம்பிக்கை உள்ளோருக்கு தன்னுள் மேலும் சக்தி அதிகரிப்பதை உணர முடியும்.
   
     மற்றவர்களை பார்த்து பார்த்து பொறாமை கொண்டு தம்முடைய வாழ்க்கையை பலரும் வாழாமலேயே செத்துவிடுகிறார்கள். இன்று முகத்துதி பாடுவது அதிகரித்துவிட்டது. "இருவேறு சிரிப்புகள் " என்ற கவிதையில் முகத்துதி பாடுவதை மிக அழகாக நயம்பட சொல்லியிருப்பார் கவிஞர்.
    ஒசைகளும் சத்தங்களும் என்கின்ற கவிதையில்
"எங்கெங்கு கேட்பினும்
மௌனங்களை மிதிக்கும்
மரணச்சத்தம்...."
  என்று இயற்கைக்கு முரணான வாழ்க்கை மீது வெகுண்டெழுந்து வேதனைப் படுகிறார் கவிஞர்.
    "நடைப்பயிற்சி செலவோரில்
பலரும்
நடைப்பயிற்சி செய்வதில்லை
நான் உள்பட...."
   என்று ஒரு கவிதையில் குறிப்பிடுகிறார். என்ன என்று ஆச்சரியமாக இருக்கிறதா...!! நூலை வாங்கி நீங்களே வாசித்து பாருங்கள். உண்மை புரியும்.
     இன்றைய அரசியலைப் பற்றி குறிப்பிடும் பொழுது...
"மனுக்களை வாசித்து
கண்ணீரால்
ததும்புகின்றன
குப்பைத் தொட்டிகள்....!
  உண்மை தானே கவிஞர் குறிப்பிடுவது.
      சமூகம் சார்ந்து, காதல் சார்ந்து என்று ஒவ்வொருவரது வாழ்க்கையையும் கவிதையாக படைத்திருக்கும் இந்த "தேவதைகளால் தேடப்படுபவன் " கவிதை நூல் எல்லோரது கைகளிலும் தவழ வேண்டிய நூல். தமிழ் கூறும் நல்லுலகம் கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்களை மேலும்மேலும் கொண்டாடி மகிழும் என்பது திண்ணம். இதுவே எனது எண்ணம்.

  நூல் ஆசிரியர் : கவிஞர் தங்கம் மூர்த்தி
புதுக்கோட்டை
பேச : 9443126025
பக்கங்கள்: 72
பதிப்பு :டிசம்பர் 2016
விலை  :ரூபாய் 60/-
நூல் வெளியீடு :
படி வெளியீடு
கே.கே.நகர் மேற்கு,
சென்னை  - 600078
(பாண்டிச்சேரி கெஸ்ட் ஹவுஸ் அருகில்‌)
பேச : 8754507070
          அன்பு பண்பு பாசம்
   
நட்பின் வழியில் எந்நாளும்

       சோலச்சி புதுக்கோட்டை
       பேச : 9788210863

2 கருத்துகள்: