வியாழன், 3 மார்ச், 2016

மதுவை ஒதுக்கிடு தோழா....

மதுவை ஒதுக்கிடு தோழா.....

                                                              நாள்:04.03.2016
      
             நாளும் பொழுதும் தானாய் கழிந்தாலும் மனித வாழ்க்கை பெரும்பாலும்  மதுவாலே அழிக்கப்படுகிறது. தெருவுக்கு தெரு மதுக்கடைகள் கம்பீரமாக நிற்கிறது. குடித்த மனிதன் வாழ்க்கை மட்டும் குப்புறக்கிடக்கிறது. இந்த பூமியில் நல்லது என்று சொல்லக்கூடியவை ஏராளமாய் இருக்கின்றபோதும் தீயது மட்டும்தான் தீவிரமாக நேசிக்கப்படுகிறது.

      மதுக்கலாச்சாரம் கௌரவமாக பார்க்கப்படுகிறது. மதுவை அருந்தாத மனிதனை சமூகம் புறந்தள்ளுவதாக எண்ண வைக்கிறது. மதுவை மனிதன் குடித்தாலும் உண்மை அதுவல்ல. மதுதான் மனித வாழ்வை குடிக்கிறது. "பார்த்து திருந்தனும் இல்லனா பட்டு திருந்தனும் " என்பது கிராமத்து மொழி. இங்கே திருந்துவதற்கு வழியில்லை.  வியாபாரிகள் விற்பனை செய்யத்தான் பார்ப்பார்கள். வாங்குவதும் ஒதுக்குவதும் நம் கையில்தான் இருக்கிறது.

       இன்று அதிகாலையில் உறவினர் ஒருவர் தொடர்பு கொண்டு நண்பர் ஒருவர் இறந்துவிட்டதாக சொன்னார். கேள்விப்பட்டதும் அதிர்ந்து போனேன். மீளாதுயரோடு மாலை ஒன்றை வாங்கிக்கொண்டு நண்பர் வீட்டை அடைந்தபோது  கூட்டம் கட்டுக்கடங்கவில்லை. அழுகையை தேற்றிக்கொண்டு குளிர்பதனப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த நண்பரின் உடல் மேல்  மாலையை வைத்துவிட்டு திரும்பினேன். என்னால் நடக்கமுடியவில்லை. யாரோ என் கால்களை இறுகப்பிடித்திருந்தார்கள். குனிந்து பார்த்தேன். நண்பரின் மனைவி கதறுகிறார். எதைச்சொல்லி தேற்றுவது....

          மரணத்திற்கு முதன்மை காரணமாக மது என்று எல்லோராலும் ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கப்பட்டது. வாழத்தான் பிறந்தோம்.. இறப்பு எல்லோருக்கும் உண்டு.  அதை நாமே தேடிக்கொள்ள வேண்டாமே...

      இறந்த நண்பருக்கு வயது 45. அவரது மனைவி அப்பகுதியின் ஊராட்சி மன்றத்தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது...

     மாற்றத்தை நோக்கி பயணிப்போம்.....

                    - சோலச்சி
                       புதுக்கோட்டை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக