சனி, 31 டிசம்பர், 2016

ஆங்கில புத்தாண்டு .....

ஆங்கில புத்தாண்டு நாளில், தானாக முன்வந்து சோலச்சியின் அரண்மனையை அலங்கரிக்கும் பக்கத்துவீட்டு மழலைச் செல்வங்கள் .....
அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்

புதன், 28 டிசம்பர், 2016

34வது வீதி கலை இலக்கிய களம்

        "வீதி கலை இலக்கிய களம் "  35வது கூட்டம் 25.12.2016 அன்று காலை 10.00 மணிக்கு புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் ஆக்ஸ்போர்டு உணவுக் கல்லூரியில் நடை பெற்றது.  கூட்டத்திற்கு கவிஞர் ரேவதி தலைமை ஏற்க நான் (சோலச்சி) வரவேற்று நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினேன்.

     சிறப்பு விருந்தினர்களாக வருகை தந்த திருவில்லிபுத்தூர் கவிஞர் சி.அன்னக்கொடி அவர்கள்  மற்றும் சேலம் கவிஞர் கூ.ரா.அம்மாசையப்பன் அவர்களை வரவேற்று வாழ்த்து கூறி நிகழ்ச்சி தொடங்கியது. 

       முதல் நிகழ்வாக மறைந்த முந்நாள் முதல்வர் மாண்புமிகு டாக்டர் செல்வி ஜெ.ஜெயலலிதா மற்றும் கவிஞர் இன்குலாப் அவர்களுக்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. பிறகு கவிஞர் மிடறு முருகதாஸ் அவர்கள் கவிஞர் இன்குலாப்பின் "மனுசங்கடா " பாடலைப்பாட நிகழ்ச்சி தொடந்தது.
 
      கவிஞர் மா.கை.நாகநாதன், பொன்னமராவதி கவிஞர்  அ.கருப்பையா (பணிநிறைவு பெற்ற ஆசிரியர்) , கவிஞர் பவல்ராஜ், கவிஞர் சாமியப்பன், கவிஞர் சிவக்குமார், கவிஞர் பாரதி செல்வன்,  கவிஞர் பாரதி ஏகலைவன், சிறுகதை எழுத்தாளர் செம்பைமணவாளன், கவிஞர் காசாவயல் கண்ணன்,  போன்ற கவிஞர்கள் கவிதை வாசித்தார்கள்.  கவிதை தலைப்பு "நான் சொல்றத கேளுங்க " என்று கொடுக்கப்பட்டிருந்தது. கவிஞர்கள் சிலர் அவர்களது தலைப்பில் எழுதி வாசித்தனர்.

      குழந்தைச் செல்வங்கள் சமத்துவபுரம் பள்ளி மாணவி வெர்ஜினும் நிலையப்பட்டி பள்ளி மாணவி ஜனனியும் மிகச் சிறப்பாக பாடல்கள் பாடினார்கள். கவிஞர் பவல்ராஜ் அவர்கள் காதல் பாடல் ஒன்றை இசையுடன் பாட அனைவரும் தன்னை மறந்து தாளம் போட நிகழ்ச்சி மிகச் சிறப்பாக அமைந்தது. பதிலுக்கு நானும்
"நகைக்கடை வீதியில
நாங்க ஒன்னா போகயில
நகைக்கடை ஓனரெல்லாம்
எட்டிப் பார்த்தாங்க அவங்க
நகைகளெல்லாம் உண்மையானு
தட்டிப் பார்த்தாங்க....."
  -என்று என் மனைவிக்காக நான் எழுதிய பாடல்களை பாட நிகழ்ச்சி கலகலப்பாக சென்றது.

    சேலம் கவிஞர் கூ.ரா.அம்மாசையப்பன் அவர்களின் "ஞாபக நடவுகள் " கவிதை நூலினை எங்கள் அம்மா கவிஞர் மு.கீதா அவர்கள் நூல் விமர்சனம் செய்தார்கள். ஏற்புரை வழங்கிய கவிஞர் கூ.ரா.அம்மாசையப்பன் அவர்கள் நன்றி தெரிவித்ததோடு மிடறு முருகதாஸ், கவிஞர் மு.கீதா, எனது (சோலச்சி) கவிதைகள் குறித்தும் தற்கால கவிதைகள் குறித்தும் மிகச் சிறப்பானதொரு உரையை வழங்கிய விதம் மிகவும் பாராட்டுக்குரியது. 

#"நான்
எழுதிய
முற்றுப்பெறாத
முதல் கவிதை ..."

#"அன்று
மூன்று பக்கம்
கடலால்....
இன்று
நான்கு பக்கமும்
கடனால்...."

#"படிப்பதற்கு
மட்டுமல்ல
பள்ளிக்கூடம்....
ஒருவேளை
பசியாறவும்தான்...."

    - இவை கவிஞர் கூ.ரா.அம்மாசையப்பன் அவர்களின்  கவிதைகளில் சில.

          கவிஞர் மா.மு.கண்ணன் அவர்கள் இயற்கை மருத்துவம் குறித்து சிறப்பானதொரு கட்டுரையை வழங்கினார்கள். படைப்பாளர்களின் ஒவ்வொருவரின் நிகழ்வுக்கு பின்னர் அவர்களது படைப்பு குறித்த விவாதமும் சிறப்பாக நடந்தேறியது.

      நிகழ்ச்சிகள் அனைத்தையும் உற்றுநோக்கிக்கொண்டு இருந்த கவிஞர் சி.அன்னக்கொடி அவர்களின் சிறப்புரை மிகவும்‌ சிறப்பானதாகவே இருந்தது.  இவர் ஆற்றோரம் மண்ணெடுத்து, மனசோடு பேசு, விதைகள் விழுதுகளாய் என்கின்ற மூன்று கவிதை நூல்களும் கருவறை முதல் கல்லறை வரை என்கிற பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு நூலும் எழுதியுள்ளார்.

#"மரணமே... என்னை
நெருங்க நினைக்கிறாயா
மரணமே உனக்குத்தான்
மரண அடி நிச்சயம் ....!

# "மனித வாழ்க்கையை
கூட்டிப் பார்த்தேன்
கழித்துப் பார்த்தேன்
பெருக்கிப் பார்த்தேன்
வகுத்தும் பார்த்தேன்
கிடைத்தது ஒன்றே ஒன்றுதான்
"ஒன்னுமில்லை....!"

#"மாமியாருக்கு தனித்தட்டு
போட்டு வைத்திருந்தாள் - மருமகள்
பேரன் சொன்னான்
பாட்டி இறந்த பிறகு
பத்திரப்படுத்திக்கொள்
உனக்கும் பயன்படும் என்று..."

   -இது இவரது கவிதைகளில் சில.

        புதுக்கோட்டை மக்களுக்கே தெரியாத பல செய்திகளை சங்க பாடல்களிலிருந்து எடுத்துக்காட்டுகளுடன் கூறி புதுக்கோட்டைக்கு புகழ் சேர்த்த விதம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. 

      சிறப்பு விருந்தினர்களுக்கு பொன்னாடையும் நூல்களும் நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது.

      நிகழ்வின் கடைசி நிகழ்வாக மாற்று உணவுமுறை குறித்து செயல் விளக்கமும் வீடியோவும் காட்டப்பட்டது. மாற்று உணவுமுறை குறித்து எங்கள் அம்மா கவிஞர் மு.கீதா அவர்கள் விளக்கினார்கள். கவிஞர் மிடறு முருகதாஸ் நன்றி கூற மதியம் 1.25 க்கு நிகழ்வு சிறப்பாக நிறைவு பெற்றது.

திங்கள், 26 டிசம்பர், 2016

ஆதாரின் அவல நிலை ...

ஆதாரின் அவல நிலை .....

   என் தேசம் எதை நோக்கி போகிறது ....
திட்டமிடலின் ஒழுங்குமுறை தெரியாதவர்களின் பிடியில் சிக்கி என் தேசம் சீரழிவின் உச்சத்திற்கு சென்று கொண்டு இருக்கிறது.

   ஆம், ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்துவிட்டு டிஜிட்டல் பண வர்த்தகம் என்ற பெயரில் கோமாளி தனங்கள் தினந்தோறும் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. 

      அதே போல்தான் ஆதார் என்கிற பெயரில் அரசு, மக்களை அலைக்கழித்து வேடிக்கை பார்க்கிறது . ஒவ்வொரு ஊராட்சிக்கும் அலுவலர்களை முகாமிடச்செய்து பள்ளி மாணவர்களுக்கு மட்டுமாவது ஆதாரை எடுக்க வகை செய்யாமல் அனைத்து தரப்பினரும் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆதார் என்கிற பெயரில் காத்திருந்து அவதிக்குள்ளாக்குவது எந்த விதத்தில் நியாயம்.

   அதுவும் குறைவான எண்ணிக்கையில்தான் அலுவலர்கள் பணியாற்றுகிறார்கள். ஆமை வேகம் என்று கூட சொல்ல முடியாது.. அவ்வளவு மந்தமான நிலை.

    குழந்தைகளும் பெரியவர்களும் குடிப்பதற்கு கூட தண்ணீர் இல்லாமல் அவதிப்படும் நிலையை சொல்லி மாளாது.

   ஆதார் விண்ணப்பங்களை அரசே இலவசமாக வழங்கி அரசு அலுவலர்கள்  பூர்த்தி செய்ய வேண்டும். ஆனால் நிலைமை தலைகீழாய் இருக்கிறது.  அதிக விலை கொடுத்து விண்ணப்பங்களை வெளியே வாங்கும் அவல நிலை ...

  இடம் : வட்டாட்சியர் அலுவலகம், இலுப்பூர்,
புதுக்கோட்டை மாவட்டம்.

ஞாயிறு, 25 டிசம்பர், 2016

காட்டு நெறிஞ்சிக்கு - கவிஞர் ஈழபாரதி

காட்டு நெறிஞ்சி

 December 25, 2016 by கவிஞர் ஈழபாரதி

 கவிஞர் ஈழபாரதி

நாம் கவனிக்கத் தவறிய, இயந்திர வாழ்க்கையில் நாம் இழந்த கிராமத்து வாழ்வியல் முறைகளை மண் வாசனையோடு தந்து இருக்கிறார் “காட்டு நெறிஞ்சி” யில் கவிஞர் சோலச்சி.

முதல் பரிசு என்ற சிறுகதை நூலின் மூலம் அறிமுகமான சோலச்சியின் இரண்டாவதுப் படைப்பாக வெளிவந்துள்ளது இந்த “காட்டு நெறிஞ்சி”.

கவிதை என்றாலே காதலைப் புறம் தள்ளிவிட்டு எழுதிவிட முடியாது. காரணம் காதல்தான் அவனின் முதல் கவிதை.

எங்குப் பார்த்தாலும்
எழுதிவிட்டுத்தான்
செல்கிறேன்
என்னோடு
உன் பெயரையும்
கள்ளிச் செடிகளில் !

எல்லோருக்கும் வாய்த்திருக்கும் கிராமங்களில் கள்ளிச் செடிகளில் ரணமான காதல் முள்ளினால் குத்திய வடுக்களால் இதயத்தின் ஆறாத வலிகளால் இன்னும் அப்படியே பதியப்பட்டு இறக்கிறது கள்ளிச் செடிகளில் காதல்.

அயர்ந்து உறங்கினேன்
ஆடை இழந்த மரத்தின்
அடியில்
பூமி சிம்மாசனத்திற்குக்
குடை பிடித்தவாறு
காளான்கள்!

வெப்பமயமாகிவரும் பூமியில், இனி என்ன மிச்சம் இருக்கப்போகிறது? என்ற ஆசிரியரின் கோபம்தான் கவிதையாக படிந்து இருக்கிறது.

கிராமத்து வயல்கள், குளங்கள், ஆறுகள் காணாமல் போய்விட்டன. மணல் இன்று அதிகாரவர்க்கத்தின் சுரண்டலாக மாறிவிட்டது. தனியார் மயமாக்கலால் கானாமல் போனது கிராமத்து வயல்கள் மட்டுமல்ல நம் தலைமுறை பிள்ளைகளின வளங்களும்தான்.

என் இனம்
அழிந்தலைத் தடுக்கத்
துப்பில்லை
தேசிய கீதம்
ஒரு கேடா…!

கிராம வாழ்வியலை முன் வைத்து நிறைய கவிதைகள் இத் தொகுப்பில் இடம் பெற்றிருந்தாலும், ஈழம் சார்ந்தும் கவிதைகள் இத்தொகுப்பில் காணக் கூடியதாக இருக்கின்றது. இருந்தாலும் இப்படிக் கேட்பதற்கு ஒரு துணிச்சல் வேண்டும்.

இந்திய இறையாண்மை மீறி எப்படி பேசலாம், எப்படி எழுதலாம் என்ற எல்லாக் கேள்விகளுக்கும் ஒரு பதில் வைத்திருக்கிறார். ஒரு இனம் கொத்துக் கொத்தாக நம் கண்முன்னே செத்து வீழ்ந்துக் கிடக்கிறது, இந்நூற்றாண்டில்  நடைபெற்ற பாரீய மனித பேரவலம் ஈழத்தில், நடந்தேறிய பிறகும், ஆட்சி அதிகாரங்களுள்ள சரிவதேசங்கள் கேட்கவில்லையே என்ற ஆதங்கம் கவிஞரின் கவிதைகளில் அனலாய் எரிகின்றது.

எவ்வளவு உழைத்தாலும்
உழவுக்கு
கூலியாய்க் கிடைப்பது
வறுமை மட்டுமே!

சேற்றை
புறம் தள்ளிவிட்டு
சோற்றை மட்டுமே
ருசிக்கின்றார்கள்
சுகவாசிகள்!

இப்படி இன்னும் கவிதைகள் நிறைந்து இருக்கின்றது. கவிஞர் சோலச்சியின் தொகுப்புகள் முழுவதும் தமிழின அழிப்புக்கு எதிராக, முதலாளித்துவ சுரண்டலுக்கு எதிராக, சாதி, அடக்கு / ஒழுங்கு முறைகளுக்கு எதிரான, போர்த்தொடுத்து இருக்கிறார் கவிதைகளில் கவிமதி சோலச்சி.

காணாமல் போன கிராமத்து வயல்களுக்காக, உழவுக்காக, மாடுகளுக்காக, ஆற்றுமணல் பருக்கைகளுக்காக, ஈழத்திற்கான ஆதரவாக ஒரு கிராமத்துக் குரலாய் ஒலிக்கத் தொடங்கி இருக்கிறது காட்டு நெறிஞ்சி.

எல்லாவற்றையும்பேசும் கவிதையாக காட்சிப்படுத்தி அழகிய வடிவமைப்பில் வெளிவந்திருக்கும் கவிமதி சோலச்சியின் கவிதைகள் இலக்கியத் தளத்தின் மக்களின் வாழ்வியல் படைப்பாகும்.

14 x 21,5 செ.மீ அளவில் 128 பக்கங்கள் கொண்ட இந்நூலின் விலை :  110 INR

தொடர்புகளுக்கு மின்னஞ்சல் : nandavanam10@gmail.com
Solachysolachy@gmail.com
 நூல்கள் அறிமுகம்

வெள்ளி, 23 டிசம்பர், 2016

உதட்டுச்சாயம்..... -சோலச்சி





உன்னுள்
குடியமர்த்திக் கொண்டாய்
கார்மேக கூந்தலால்
சாமரம் வீசுகின்றாய்...

கூடுவிட்டு பாயும் வித்தை
எங்கு கற்றாய்....

குடைந்து எடுக்கிறாய்
என்னை...

உறக்கமின்றி தவிக்கும்
என் கண்கள்....

மயக்கம் தெளிகின்றன
உன்
உதட்டுச் சாயத்தில்....!

         - சோலச்சி புதுக்கோட்டை

திங்கள், 19 டிசம்பர், 2016

முதல் பரிசு சிறுகதை நூல் குறித்து சுகன்யா ஞானசூரி



"முதல் பரிசு" - சோலச்சி சிறுகதைத் தொகுப்பு-வாசிப்பு அனுபவம்
"முதல் பரிசும் சிறுகதைக்கான எனது முதல் பதிவும்"
- சுகன்யா ஞானசூரி.

கவிமதி சோலச்சியின் "முதல் பரிசு" சிறுகதைத் தொகுப்பு இனிய நந்தவனம் பதிப்பக வெளியீடாக வந்துள்ளது. இந்நூல் கவிஞரின் முதல் நூலும் கூட. சிறுகதையை முதல் தொகுப்பாக வெளிக்கொண்டு வந்த கவிஞருக்கு முதலில் எனது வாழ்த்துகள்..... 43 சிறுகதைகள்... நூல் முழுமையும் நிறைய பாத்திரப் படைப்புகள்.... பாக்யா வார இதழ், தாழம்பூ இதழ் ஆகியவற்றில் பிரசுரமான கதைகளும் அடக்கம்.

புதுக்கோட்டை மண் மணம் மாறாத பாத்திரப் படைப்புகள். சமூகத்தில் பீடித்திருக்கும் வறுமை, சாதியக் கொடுமை போன்றவைகள் இவரது சிறுகதைகளில் விரவிக் கிடக்கிறது. விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் விதமாகவும் சில சிறுகதைகள் படைத்துள்ளார்.







இத்தொகுப்புக்கு "சாம்பல்" அல்லது "கீரிமலை" எனப் பெயர் சூட்டியிருக்கலாமோ என எண்ணத் தோன்றுகிறது. முதல் தொகுப்பு என்பதால் சென்டிமென்ட் கருதி தலைப்பை மாற்றியிருக்கக் கூடுமென கருதுகிறேன். இது ஆசிரியரின் உரிமை.

43 சிறுகதைகளில் என் மனதைத் தொட்டவை, தைத்தவை மொத்தம் 28 கதைகளே. மற்றக் கதைகள் பிடிக்கவில்லை என்பது அர்த்தமில்லை.... பெரிதாக எனக்கு தாக்கத்தை உண்டுபணவில்லை. அவ்வளவே. சில கதைகளை வேகமாக முடித்து விடுகிறார். "ஆட்டுக்கறி" கதையை இன்னும் சற்று நீட்டி விடமாட்டார எனும் ஆர்வத்தை வாசிப்பாளனிடம் தூண்டவும் செய்கிறார். இதுதான் சிறந்த கதையாளனுக்கான உக்தி.

"கீரிமலை" கதையில் வரும் இரவி கதாபாத்திரம் இன்றைய தலை சிறந்த மனிதர் சகாயம் அவர்களை பிரதிபலிக்கிறது. அடுத்த தலைமுறைக்கு நாம் எதையும் விட்டுச் செல்லப் போவதில்லை எனும் ஆதங்கம் மேலிடுகிறது. அந்த கீரிமலையும் மேலூர் கீழவளவு மலையும் ஒன்றாகவே வாசிக்கும் என் மனதுக்குள் படர்கிறது.
கவுரவக் கொலைகளில் பலியான இளவரசன், கோகுல்ராஜ் போன்றவர்கள் இப்படித்தான் இரையாகிப் போயிருப்பார்கள் என்பதை "சாம்பல்" சிறுகதை உணர்த்துகிறது. அந்த மீனாட்சியின் கதறல் இன்னும் கேட்டுக்கொண்டே இருக்கிறது எரியும் நெருப்பின் ஜுவாளைகளினூடாக. அடக்கியாளும் சமூகத்தின் காதுகளுக்கு அவளின் கதறல் கேட்பதில்லை.







இதுபோன்ற இன்னும் நிறைய சிறுகதைகளை யாக்குவதற்கு கவிஞர் சிறுகதைகளின் முன்னோடிகளின் எழுத்துகளை நிறைய வாசிக்க வேண்டும். சில கதைகள் சிறுகதை வரையறைக்குள் வராமல் குறுங்கதை, ஒரு நிமிடக் கதையின் தொனியிலும் வருகிறது. இவற்றைச் சரிசெய்து இன்னுமொரு சிறப்பான தொகுப்பைத் தருவார் நண்பர் கவிமதி.சோலச்சி எனும் நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

புதுக்கோட்டை மண் பல படைப்பாளிகளை உருவாக்கும் கலைக்கூடம்.... அந்தக் கலைக்கூடத்தின் முதல் படியில் சோலச்சி தனது தடத்தை பதித்து விட்டார் என்றால் மிகையல்ல. புதிய படைப்பாளர்களின் பதிப்புகளை வெளியிட்டு அறிமுகம் செய்கின்ற இனிய நந்தவனம் பதிப்பகத்தாருக்கும் வாழ்த்துகள்.....உங்கள் எழுத்து சிறக்க வாழ்த்துகள் சோலச்சி.....

(பின்குறிப்பு: இது விமர்சனம் அல்ல; எனது வாசிப்பு அனுபவக் கருத்தே)
நூல் : முதல் பரிசு (சிறுகதைகள்)
ஆசிரியர் : சோலச்சி
முதல் பதிப்பு : ஜூலை 2015
வெளியீடு : இனிய நந்தவனம் பதிப்பகம், திருச்சி.
தொடர்புக்கு பேச : 9443284823 (பதிப்பகம்),
9788210863 (ஆசிரியர்).

வீதி கலை இலக்கியக் களம்

     "அன்புடன் அழைக்கின்றோம் "

   வீதி கலை இலக்கியக் களம்
             புதுக்கோட்டை

நாள் : 25.12.2016.  நேரம் : காலை 9.30 
இடம் : ஆக்ஸ்போர்டு உணவுக்கல்லூரி,
     புதிய பேருந்து நிலையம்,      புதுக்கோட்டை.

வரவேற்பு & நிகழ்ச்சி தொகுப்பு : 
                      
                   சோலச்சி

தலைமை :  ரேவதி

பாடல்கள் :

        பவுல்ராஜ் - கௌரி,
        மு.ஜனனி,
       வெர்ஜின்.
      
நூல் விமர்சனம் :

                     மு.கீதா
      (ஞாபக நடவுகள் - கவிதை நூல்)

ஏற்புரை :
                  கவிஞர்
        கூ.ரா.அம்மாசைப்பன்,
                     சேலம்.

கவிதைகள் :

       செம்பை மணவாளன் ,
       பாரதி ஏகலைவன்,
       சிவக்குமார்,
        பாரதி செல்வன்,
        மா.கை.நாகநாதன்.

அனுபவ பகிர்வு :

                 கா.மாலதி.

கட்டுரை :

           மா.மு.கண்ணன்.

சிறப்பு விருந்தினர் :

     கவிஞர் அன்னக்கொடி,
         திருவில்லிபுத்தூர்.

நன்றியுரை :
            
        மிடறு முருகதாஸ்

   வாருங்கள் தோழர்களே....
   இலக்கிய வடம் பிடித்து
   இவ்வுலகை ஆள்வோம்..!!

அமைப்பாளர்கள் :

சோலச்சி 978210863

மிடறு முருகதாஸ்
94 43 824331

ஞாயிறு, 18 டிசம்பர், 2016

அபெகா பண்பாட்டு இயக்கம்

இன்று மாலை, அபெகா பண்பாட்டு இயக்கம், புதுக்கோட்டை நடத்தும் அறிவின் இலக்கணம் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் "இந்தியாவில் சாதிகள் " ஆய்வுக்கட்டுரையின் நூற்றாண்டு விழாவில் துவக்கப்பாடலாக "தூங்கி கிடக்குடா தேசம்...." என்னும் எனது பாடலை பாடியபோது.....

விழாவில் எங்கள் எழுச்சிக் கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்கள்,  முத்தமிழ்க் கவிஞர் நா.முத்துநிலவன் அவர்கள், ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவர்கள்.... மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சி ஒருங்கமைப்பு மக்கள் நெறியாளர் மருத்துவர் செயராமன் அவர்கள், சிறுகதைச் செல்வர் ராசி பன்னீர் செல்வன் அவர்கள்

சனி, 17 டிசம்பர், 2016

புதுக்கோட்டை புத்தகத்திருவிழா

புதுக்கோட்டை புத்தக திருவிழா ......

   2016நவம்பர் 26 முதல் டிசம்பர் 04 வரை புதுக்கோட்டை நகர்மன்றத்தில்  நடைபெற்ற புத்தக திருவிழா வரலாற்று சிறப்புமிக்க ஒன்றாக அமைந்திருந்தது. முதல்நாள் நிகழ்வினை மாவட்ட ஆட்சித்தலைவர் உயர்திரு எஸ்.கணேசன் அவர்கள் கலந்து கொண்டு திருவிழாவினை தொடங்கி வைத்தார்கள். அன்று மாலை தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மாண்புமிகு டாக்டர் சி.விஜயபாஸ்கர் அவர்கள் கலந்து கொண்டு மாலை நடைபெறும் கலைநிகழ்ச்சிகளை தொடங்கி வைத்து சிறப்பு செய்தார்கள்.ஒவ்வொரு நாள் மாலை  நிகழ்வையும் மிக நேர்த்தியாக கொண்டு சென்றது எங்கள் எழுச்சிக்கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்களின் பங்கு அளப்பறியது.

        நாள்தோறும் மாலை ஆறு மணி முதல் இரவு ஒன்பது மணி வரை மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் பட்டிமன்றம்,  இலக்கிய உரைவீச்சு என ஒன்பது நாளும் புதுக்கோட்டை திருவிழாக்கோலம் பூண்டிருந்தது.

     புதுக்கோட்டை மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்க தோழர்களின் பணி மிகவும் பாராட்டக்கூடியது.

    தோழர்கள் மணவாளன், ரமாராமநாதன், பொன்.க, புதுகை செல்வா, புதுகைப்புதல்வன்,  நாராயணன்,  குமரேசன், சதாசிவம்,  மு.கீதா, ஆர்.நீலா, பீர்முகமது, மீரா செல்வக்குமார்...... என தோழர்களின் பட்டியல் நீளும்.

       இந்த புத்தகத்திருவிழாவில் புதுமை என்னவென்றால் புதுக்கோட்டை படைப்பாளிகளுக்கென்று தனியாக ஒரு ஸ்டால் அமைத்ததுதான். அதில் புதுக்கோட்டை படைப்பாளிகளின் ஆயிரக்கணக்கான நூல்கள் அந்த அரங்கில் விற்பனைக்கு வைக்கப்பட்டது. புதுக்கோட்டையில் இவ்வளவு படைப்பாளிகளா என கண்டவர்கள் வியந்து போனார்கள். புதுக்கோட்டை படைப்பாளிகள் அரங்கினை மிகச்சிறப்பாக மேலாண்மை செய்து விழா சிறக்க துணை நின்றவர்களில் எங்கள் அய்யா முத்தமிழ் அறிஞர் நா.முத்துநிலவன் அவர்களின் பணி மிக முக்கியமானதாகும்.

      ஸ்டால் அமைத்திருந்த பதிப்பகத்தார் மிகவும் நெகிழ்ச்சியுடன் சென்றார்கள். இத்திருவிழாவில் எனது "முதல் பரிசு " சிறுகதை நூல் பதினொன்று,  "காட்டு நெறிஞ்சி " கவிதை நூல் ஒன்பது என மொத்தம் இருபது நூல்கள் விற்பனையானதாக எங்கள் அய்யா முத்தமிழ் அறிஞர் நா.முத்துநிலவன் அவர்கள் சொன்னபோது நான் நெகிழ்ந்து போய்விட்டேன். புதுக்கோட்டை படைப்பாளிகள் அரங்கை முழுமையாக கவனித்துக் கொண்ட அருமைத்தம்பி கவிஞர் மா.கை.நாகநாதனுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    அவ்வப்போது மழை வந்து முத்தமிட்டபோதும் மிகச்சிறப்பாக புத்தகத்திருவிழா நடைபெற்றது.

     இனி ஒவ்வொரு ஆண்டும் புதுக்கோட்டையில் இன்னும் நிறைய மாற்றங்களுடன் புதுமையாக நடைபெறும்.  இந்த ஆண்டு புத்தகத்திருவிழாவை காணத்தவறிய தோழர்கள் இனி வரும் காலங்களில் மறக்காமல் வாருங்கள். கொண்டாடி மகிழ்வோம்.

        - நட்பின் வழியில்
     சோலச்சி புதுக்கோட்டை

வெள்ளி, 16 டிசம்பர், 2016

திமுக தலைவர் .....

              27.07.2002 அன்று சென்னை மாநகரின் முன்னாள்  மேயர் சா.கணேசன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற தமிழக கவிஞர் கலை இலக்கிய சங்கத்தின் நூல் வெளியீட்டு விழாவில் திமுக தலைவர் டாக்டர் கலைஞர் அவர்கள் பற்றி நான் எழுதி பாடிய பாடல்.....

தன்னானே தான னன்னே
தன்னே னன்ன தானானே....(2)

ஊரு உலகத்திலே உந்தன் புகழ் ஓங்குதய்யா
உத்தமி தமிழின்
உயிர் மூச்சு சிறக்குதய்யா.....

கண்ணோடு காண்பதெல்லாம்
காவியமாய் படைக்குதய்யா
கவிதையிலே உம்திறமை
கொடி கட்டி பறக்குதய்யா....

திருவாரூர் தென்றலிலே
தேனாக மிதந்து வந்தாய்
சென்னை மாநகரிலே
சிறப்போடு வாழ்ந்து வாராய்.... (தன்னா..)

இலக்கியங்கள் எத்தனையோ
உந்தன் விரல்கள் தீண்டியது
இவ்வுலகில் உந்தன் சேவை
இமயத்தையே தாண்டியது....

சொல்லிவிட நாட்களில்லை
சொல்லத்தானே வார்த்தையில்லை
அய்யாவே உங்களை அன்பு
உள்ளங்கள் மறப்பதில்லை ... (தன்னா...)

         - சோலச்சி புதுக்கோட்டை

       (நான் எந்த அரசியல் கட்சியையும் சாராதவன். பாராட்டும் போது பாராட்டுவதும் , தவறு என்று தெரியும் நேரத்தில் தைரியமாக சுட்டிக்காட்டவும் ஒருபோதும் தயங்க மாட்டேன். ஈழத்தமிழர்களுக்காக சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்த போது முன்னாள் முதல்வர் அவர்களை பாராட்டியதும் பல நேரங்களில் சுட்டிக்காட்டியதும் குறிப்பிடதக்கது.)

    விரைவில் நலம் பெற மனதார வாழ்த்துகிறேன்.