Monday, 28 September 2015

எங்கே போகுது பயணம்


     வளர்ந்த நாடுகள்; வளரும் நாடுகள் என்று பிரித்து மார்தட்டிக் கொள்கிறோம். வளர்ச்சி என்றால் என்ன? எதன் அடிப்படையில் இப்படிப் பிரிக்கிறோம்? பொருளாதாரம், விஞ்ஞான வளர்ச்சி என்ற பாகுபாட்டில் வகுக்கின்றோம். எப்படி பிரித்தாலும், எப்படி வகுத்தாலும் சுற்றுச்சூழல் என்று பார்க்கின்ற பொழுது நாம் அனைவருமே தலை குனிந்து போகின்றோம்.
     மேலைநாட்டு பொருளாதாரத்தின் மேன்மைகளை எல்லாம் கட்டுரையாக எழுதி தொகுத்த போது அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு 15 வயது. அறிவின் இலக்கணமாக போற்றப்படும் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் தற்போது இருந்திருந்தால் சுற்றுச்சூழலுக்கும் முக்கியத்துவம் கொடுத்து ஒவ்வொரு நாடுகளின் அவல நிலையை தொகுத்து வழங்கி இருப்பார்கள். அந்த அவல்நிலையைப் போக்க நாம் ஒவ்வொருவரும் முன்நிற்க வேண்டும்.
     ஒருமனிதனுக்கு சுய மரியாதை எவ்வளவு முக்கியமோ அதே முக்கியத்துவம் சுற்றுச்சூழலுக்கும் இருக்க வேண்டும். சுற்றுச்சூழலை மறந்தோமானால் விரைவில் பூமியின் சுழற்சியே நின்றுவிடும் நிலைக்கு தள்ளப்பட்டு விடுவோம்.
     சில வருடங்களுக்கு முன்னால் உலக சுகாதார நிறுவனம் அதிர்ச்சியான அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது என்னவென்றால் நெற்பயிரின் வேரை அரைத்துக் குடித்தால் விரைவில் இறப்பு உறுதி என்றும் அந்த வேரில் நச்சுத் தன்மை அளவுக்கு அதிகமாய் கலந்து இருப்பதையும் உறுதிப் படுத்தி உள்ளது. வேர் நச்சுத் தன்மையென்றால் அது விளைவிக்கும் உணவு எவ்வளவு கொடிய விஷத்தை தாங்கி இருக்கும் என்பதை உணர முடிகிறது அல்லவா?
     சில ஆண்டுகளுக்கு முன்னால் அரிசியை ஊற வைக்காமல் சமைத்தோம். இன்று ஊற வைத்து சமைக்கும் அவல நிலைக்குத் தள்ளப் பட்டுள்ளோம். நாகரிகம் எனற பெயரால் நானிலத்தை நலிவடையச் செய்து விட்டோம். “விட்டு விட்டு போகுது மூச்சு; விட்ட உடனே சுட்டு விடப் போகிறார் சுற்றத்தார்.” என்பார் பைந்தமிழ் போற்றும் பட்டினத்தார் அவர்கள். நாம் வசதியாக வாழ வேண்டும் என்பதற்காக நமக்கு வசதியாக இருந்தவற்ரை அழிக்கத் துணிந்து விட்டோம். நாம் வாழ்ந்தால் போதும்; ஊருக்கு மட்டுமே உபதேசம் என்ற மனநிலையின் விளைவுதான் சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிக்கிறது.
                தலைமுறைகள் வாழ வேண்டும் எனபதற்காக நம் முன்னோர் இயற்கை வளங்களை பாதுகாத்து வைத்தனர். நாம் வாழ விட்டு வைத்ததை நாம் விட்டு வைக்கவில்லை என்பதுதான் மிகப்பெரிய வேதனை.
     மனசாட்சியே இல்லாமல் மரங்களை அழித்து மனைகள் உருவாக்கி கற்களையும், கருவை மரங்களையும் விளைவித்தோம். விளைச்சல் தந்த விளைநிலங்களைத் தோண்டி மீத்தேன் இன்னபிற எடுத்து பாலையாக்கினோம். தண்ணீர் வர வேண்டிய வாரிகளை தன்வசப்படுத்தினோம்; தண்ணீர் சேமிக்க வேண்டிய ஏரி, குளங்களை கையகப்படுத்தி இன்று கையாளாகாதவர்களாக மாறிக் கொண்டிருக்கிறோம்.
     நமது வாழ்க்கைப் பயணமானது புதியன தேடி பயணிக்கிறது. பயணத்தில் புதியன கிடைக்கும் என்பது உறுதி என்றாலும் அவற்றை அனுபவிக்க நாம் இருக்க வேண்டுமல்லவா!
     தூய்மை இந்தியாவை நோக்கிப் பயணம் செய்து கொண்டு இருக்கின்றோம். தூய்மை இந்தியா என்றால் சாலையில் கிடக்கும் காகிதக் குப்பைகளையும் இலைதழைகளையும் அப்புறப்படுத்துவது தானா? அப்படியானால் பாலீத்தீன் குப்பைகளையும் இயந்திர மற்றும் மின்சாதனக் கழிவுகளையும் என்ன செய்வது? தூய்மை என்றால் மண்ணையும் காப்பாற்றுவது தானே. இன்று பக்கத்துத் தெருவில் கழிவுகளைக் கொட்டி விட்டு என் தெரு சுத்தமாக இருக்கிறது என்று மார்தட்டிக் கொள்கிறோம்.
     ஓசோன் படலத்திற்கும் உயிர்களுக்கும் ஆபத்து விளைவிக்காத எரிவாயுவை கண்டுபிடிக்க முன்வர வேண்டும். மக்காத மண்ணுக்கு தீங்கு தரக் கூடிய பொருட்களை உற்பத்தி செய்ய தடை விதிக்கவும் இதுவரை உற்பத்தி செய்யப்பட்டவற்றை மட்டும் மறுசுழற்சி செய்யவும் வழி வகுக்க வேண்டும். ஏரி, குளங்களை தூர்வாரி மண்னைக் காப்பாற்ற வேண்டும். ஒவ்வொருவரும் 10 மரக்கன்றுகளை நட்டு வளர்க்க வேண்டுமென்று கட்டாயச் சட்டம் கொண்டு வர வேண்டும்,
     நமது பயணம் ஏனோ தானோ என்று இருக்குமானால் நமது விஞ்ஞானம் மட்டும் நிலைத்திருக்கும். அந்த விஞ்ஞானத்தோடு விளையாட நாம் இருக்க மாட்டோம். நமது பயணம் நானிலத்தை மலரச் செய்வதற்காகவே அமையட்டும். அப்போது தான் நாம் மலர்வோம்!


குறிப்பு:-
@ "எங்கே போகுது பயணம்" எனும் இக்கட்டுரையானது "வலைப்பதிவர் சந்திப்பு-2015" நடத்தும் மின்னிலக்கியப் போட்டிக்காக எழுதப்பட்டது. வகை: கட்டுரைப் போட்டி- சுற்றுச்சூழல்.( பிரிவு-2)
@ இக்கட்டுரையானது எனது சொந்தப் படைப்பு எனவும், வேறு எந்த இதழ்களிலும் வெளியிட வில்லை யெனவும் உறுதியளிக்கிறேன்.

5 comments:

 1. பிரிவு 3 என்பதை பிரிவு 2 என்று மாற்ற வேண்டும் தோழர்...

  நன்றி...

  நம் தளத்தில் இணைத்தாகி விட்டது...

  இணைப்பு : http://bloggersmeet2015.blogspot.com/p/contest-articles.html

  புதுக்கோட்டை விழாக்குழுவின் சார்பாக...
  அன்புடன் திண்டுக்கல் தனபாலன்

  ReplyDelete
  Replies
  1. மாற்றி விட்டேன் அய்யா! நன்றிகள்!

   Delete
 2. அருமை...வாழ்த்துகள்

  ReplyDelete
 3. நம் முன்னோர் நாம் வாழ விட்டு வைதத புவியினை
  நம் சந்ததியினர் வாழ நாம் விட்டு வைக்காமல் பயணிக்கிறோமே எனும் ஆதங்கம் காட்டுகிறது கட்டுரை. வென்றிட வாழ்த்துகள்.

  ReplyDelete
 4. வணக்கம் நண்பரே! கட்டூரை அருமை! உணரவேண்டிய கருத்துக்கள் சிறப்பு! வாழ்த்துகள்

  நன்றி!!!

  ReplyDelete