Tuesday, 25 July 2017

அறந்தாங்கியில் பதவியேற்புவிழா மற்றும் பாராட்டு விழா

23.07.2017 ஞாயிற்றுக் கிழமை மாலை அறந்தாங்கி தி ஃபோர்ட் சிட்டி ரோட்டரி கிளபின் இரண்டாம் ஆண்டு பொறுப்பாளர்கள் பதவியேற்பு விழாவில் கவிஞர்கள் ,எழுத்தாளர்கள், சமூக ஆர்வலர்கள், பள்ளி மாணவர்கள் என பலரும் கௌரவிக்கப்பட்டனர். புதுக்கோட்டை படைப்பாளர்களான கவிஞர்கள் வம்பன் சரபா, கவிஞர் புதுகை பூவண்ணன், கவிஞர் சுரேகா, கவிஞர் காசாவயல் கண்ணன்,  கவிஞர் துரைகுணா, கவிஞர் இந்தியன் கணேசன் இவர்களோடு நானும் பாராட்டுப் பெற்றேன். விழாவில் சிறப்பு விருந்தினராக தோழர் மதுக்கூர் இராமலிங்கம் கலந்து கொண்டார். நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த தோழர் மருத்துவர் தெட்சினாமூர்த்தி, கவிஞர் கவி.கார்த்திக், தோழர் கான், தோழர் காஜாமைதீன் மற்ற தோழர்களுக்கும்  நன்றி.

Wednesday, 12 July 2017

தமிழர் எழுச்சிக்குரல் மாத இதழ்

தமிழர் எழுச்சிக்குரல் சூலை - 2017 இதழில் தடையை உடைத்து தமிழை உயர்த்து என்கிற கவிதை வெளியாகியுள்ளது. இந்தக் கவிதை தமிழக கவிஞர் கலை இலக்கியச் சங்கமும் தஞ்சாவூர் பாரத் கல்விக் குழுமமும் சென்ற மாதம் பாரத் கல்லூரியில்  இணைந்து நடத்திய கவியரங்கில் நான் வாசித்தது...

    அந்த விழாவுக்கு வந்திருந்த தமிழர் எழுச்சிக்குரல் மாத இதழின் ஆசிரியர் தமிழ்த்திரு பத்மநாபன் அவர்கள் என் கவிதையை வெகுவாகப் பாராட்டி கவிதையை என்னிடம் பெற்றுக் கொண்டார்கள். தற்போது சூலை இதழில் வெளியாயுள்ளது. ஆசிரியர் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றி ....

Sunday, 9 July 2017

சேலம் உருக்காலையில் கவியரங்கம்

சனிக்கிழமை இரவு சேலம் மாநகர் இரும்பாலையில் மனமகிழ்  முத்தமிழ் மன்றத்தின் 75வது குறிஞ்சிக் கவியரங்க நிகழ்வு நான் தலைமை ஏற்க இருபத்தாறு கவிஞர்கள் "நலமறிய ஆவல் " என்ற தலைப்பில் மிகச் சிறப்பாக கவிதை வாசித்தனர். இரும்பாலைக்குள் இப்படி ஒரு கரும்பாலையா என்று வியந்து போனேன். அனைத்து கவிஞர்களும் தனக்கான நடையில் அரசியல்,  சாதி, மழை, மகன், இருசக்கர வாகனம் ..... என பல்வேறுபட்ட கருவில் கவி படைத்தனர். மாதந்தோறும் நிகழும் கவியரங்க கவிதைகளை தொகுத்து "அம்பறா " என்ற கவிதை இதழாகவும் வெளியீடு செய்கிறார்கள்.  ஏதோ வாசித்தோம் தொலைத்தோம் என்றில்லாமல் கவிதைகளை ஆவணப்படுத்தும் அவர்களின் பாங்கு பாராட்டுக்குரியது. ஒவ்வொரு இலக்கிய அமைப்புகளும் இதுபோன்ற ஆவணப்படுத்துதலை பின்பற்றுவதன் மூலம் தமிழுக்கு மேலும் மகுடம் சூட்டி மகிழ முடியும்.  இந்த குறிஞ்சி கவியரங்கத்தையும் அம்பறா இதழையும் தளராமல் தொடர்ந்து நடத்திவரும் என் அருமைத் தோழர் " கவிப்பேராசான் மீரா விருது பெற்ற ஞாபக நடவுகள் கவிதை நூலின் ஆசிரியர் கவிஞர் @கூ.ரா.அம்மாசையப்பன், என் அருமைத் தோழர்  "முனியமரம் கவிதை நூலின் ஆசிரியர் கவிஞர் பாலா, அருமைத் தோழர் க.மாதுகண்ணன் மற்றும் மனமகிழ் முத்தமிழ் மன்ற நிர்வாகிகள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றியையும்  பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்....

நான் வாசித்த கவிதையில் சில வரிகள் ...

குல்லா போட்டவனையும்
கும்புடு போட்டவனையும்
குறிபார்த்தே கொலையும்
செய்கின்றார்....

காலம் மாறி காவிகளால்
நாறிக்கொண்டிருக்கிறது - அதில்
ஆணவக் கொலைகளோ
அரங்கேறிக் கொண்டிருக்கிறது...

தேசம் நாசமாய் போகும்
வேளையில்
யாரிடம் போய்க் கேட்பது
"நலமறிய ஆவல் " என்று.....

    - சோலச்சி புதுக்கோட்டை

நிகழ்வில் எனது நூல்களில் ஐம்பது பிரதிகளை மனமகிழ் முத்தமிழ் மன்ற நிர்வாகிகள்  விலை கொடுத்து பெற்றுக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது...

Wednesday, 28 June 2017

அறந்தாங்கி ரோட்டரி கிளப்.........

அறந்தாங்கி போர்ட் சிட்டி ரோட்டரி கிளப் ஏற்பாடு செய்திருந்த பாராட்டு நிகழ்வு மற்றும் நட்புகள் சந்திக்கும் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டேன். மனசுக்கு நிறைவாக இருந்தது. அறந்தாங்கியில் சுகாதாரத்துறையில் பணியாற்றி வரும் தோழர் மருதமுத்து அவர்கள் தான் கடந்து வந்த பாதைகள் பற்றி மிக உருக்கமாக பேசிய விதம் நெஞ்சை நெகிழ வைத்துவிட்டது. இன்றைய உறவுகளின் நிலை,  இயற்கையின் கொடை மற்றும் வாழ்வியலில் கவிதைகள் குறித்த பாதிப்பு மற்றும் ரோட்டரி கிளப்பின் சமூகப் பயன்பாடு பற்றி பேசினேன்.  நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்த தோழர் மருத்துவர் தெட்சிணாமூர்த்தி,  அருமை மாப்பிள்ளை செல்லத்துரை மற்றும் ரோட்டரி கிளப் தோழர்கள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி

Sunday, 25 June 2017

இன்றைய 40வது வீதி இலக்கிய அமைப்பு

இன்று (25.06.2017) புதுக்கோட்டை  வீதி இலக்கிய அமைப்பில் நான் பாடிய பாடல்....

மாட்டுக்கறியோ மரக்கறியோ
அவனவன் விருப்பம்
அடுத்தவன் உணர்வுல வேட்டு வச்சா
புரட்சிதான்டா வெடிக்கும்...

மனித இரத்தமா மாட்டு மூத்திரமா
எதுடா இங்கே புனிதம்
மனிதனை வெட்டி சாய்க்கிறான்
மதத்தை தூக்கி வைக்கிறான்
செத்துப்போனதே மனிதம்....

சர்வாதிகார நாடாப் போச்சு
சாப்பிடக் கூட வரியும் விதிச்சாச்சு
சத்தியமா சொல்லுறேன்
புருசன் பொண்டாட்டி உறவுக்கு கூட
வரியும் விதிப்பான்
புள்ள வயசுக்கு வந்தாலும்
வரிதான் கேட்பான்..........

தமிழ் கன்னடம் உருது இந்தி
எப்படி மாறும் ஒரே இனமா
இந்துக்குள்ளே அடிமையாக்குறான்
இஸ்லாமை வேரறுக்குறான்
காவியால் ஆகுது ரணகளமா....

ஆணவப் போக்கு ஓங்கிருச்சு
அத அடிச்சு நொறுக்கும் காலம் வந்தாச்சு
உள்ளபடி சொல்லுறேன்
நாம மனசனாக ஒன்னா இருந்தா
மசுர புடுங்க முடியுமா
திருப்பி அடிக்க தெருவுக்கு வந்தா
அவன்தான் தொடர முடியுமா...

   - சோலச்சி புதுக்கோட்டை